பொறியியல் கலந்தாய்வு: மாணவர் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள்

பொறியியல் கலந்தாய்வு: மாணவர் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள்
Updated on
1 min read

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு வந்து செல்வோர் வசதிக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெருங்களத்தூர் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக். படிப்புக்காக வரும் 28, 29-ம் தேதிகளில் விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் பொது கலந்தாய்வு நடக்கவுள்ளது. கலந்தாய்வு தினமும் காலை 7.30 முதல் இரவு 7.30 மணி வரை நடக்கும். மொத்தம் 8 அமர்வுகளாக நடக்கும். இதில்,ஒரு நாளைக்கு ஏறத்தாழ 6,000 மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்து செல்வார்கள்.

இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கானோர் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்காக மட்டுமே சென்னைக்கு வந்து செல்வார்கள்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு வந்து செல்வோர் வசதிக்காக ஆண்டுதோறும் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். இந்த ஆண்டும் கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூரில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு பேருந்துகள், எந்த வழித்தடங்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in