Published : 04 May 2014 09:28 AM
Last Updated : 04 May 2014 09:28 AM

பி.இ, பி.டெக். விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது: 59 மையங்களிலும் மே 20 வரை பெறலாம்

பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது. விண்ணப்பங்களைப் பெற வழக்கம்போல அதிகளவில் மாணவர்கள் திரண்டனர்.

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு வரும் மே 9-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை சனிக்கிழமை தொடங்கி யுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய நகரங்கள் என 59 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

2.5 லட்சம் விண்ணப்பங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 570 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்காக இந்த ஆண்டு 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப் பட்டுள்ளன. அந்தந்த மையங்களில் பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்தியும், எஸ்.சி., எஸ்.டி., அருந்ததியர்கள் ரூ.250 செலுத்தியும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர தபால் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை துணை வேந்தர் ராஜாராம் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 2014-15ம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விண்ணப்ப விநியோகம் மே 20 தேதி வரை நடைபெறும். ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜூனில் கலந்தாய்வு தொடக்கம்

ஜூன் முதல் வாரத்தில் ரேண்டம் எண் வெளியிடப்படும். அதே மாதம் 3-வது வாரத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி ஜூலை இறுதி வரை நடக்கும்.

கடந்த ஆண்டு 2,35,211 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 1,90,850 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் இறுதியாக 1,26,455 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 79,008 இடங்கள் காலியாக இருந்தன.

2011 ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடமுறை கள் (syllabus) மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் எந்த துறையை எடுத்து படித்தாலும் எளிதில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.

இவ்வாறு ராஜாராம் கூறினார்.

அதிகாலையில் திரண்டனர்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 8.30 மணிக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் களோ பெற்றோருடன் அதிகாலை 5.30 மணியில் இருந்தே அங்கு காத்திருந்தனர். இதனால் விண்ணப்ப விநியோகம் காலை 6 மணிக்கே தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப விநியோகத்துக்காக 20 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப் பிரிவினருக்கு 1 முதல் 5 மற்றும் 13 முதல் 20 ஆகிய கவுன்ட்டர்கள், எஸ்.சி., எஸ்.டி., அருந்ததிய மாணவர்களுக்கு 6, 7, 11, 12 ஆகிய கவுன்ட்டர்கள், பெண்களுக்கு 8, 9 ஆகிய கவுன்ட்டர்களில் விண்ணப் பங்கள் வழங்கப்படுகின்றன.

பலத்த பாதுகாப்பு

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 16-ம் தேதி எண்ணப்படுகின்றன. அங்குதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பெற மாணவர்கள் அதிக அளவில் குவிந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர, குரோம்பேட்டை எம்,ஐ.டி. வளாகம், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி ஆகிய மையங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x