

கோடை வெயில் தாக்கம் காரணமாக கறிக்கோழி உற்பத்தி குறைந்ததால் தற்போது அதன் விலை உயர்ந்துள்ளது. பண்ணைகளில் கடந்த மே மாத இறுதியில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழியின் விலை தற்போது ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் 170 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நாமக்கல், திருப்பூர், பல்லடத்தில் ஏராளமான கறிக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில், பல்லடத்தில் இருந்து தினம் இரண்டரை லட்சம் கிலோ கறிக்கோழி, கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு செல்கிறது.
இந்நிலையில், கோடை வெயில் தாக்கம் மற்றும் கோடையில் கறிக்கோழி நுகர்வு குறைவால் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் பண்ணையாளர்கள் கறிக்கோழி உற்பத்தியை குறைத்தனர். அதேநேரம் கோடை வெயில் காரணமாக ஆந்திர மாநிலத்தில் பல லட்சம் கறிக்கோழிகள் உயிரிழந்தன. இதனால், ஆந்திரா மற்றும் சென்னையில் கறிக்கோழிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், நாமக்கல், பல்லடம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் மற்றும் சென்னைக்கு அதிக அளவில் கறிக்கோழி விற்பனைக்கு செல்கிறது. எனினும், உற்பத்தி குறைவு, தேவைமிகுதி காரணமாக கறிக்கோழியின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது.
கடந்து மே மாத இறுதியில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையான கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி ரூ.105 என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் சில்லரை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.150 முதல் 170 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. கறிக்கோழியின் விலை உயர்வு இறைச்சி நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளது’ என, கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.