Last Updated : 04 Jun, 2015 11:25 AM

 

Published : 04 Jun 2015 11:25 AM
Last Updated : 04 Jun 2015 11:25 AM

தமிழை சரளமாக வாசிக்க, கணக்கு போட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம்

தமிழகத்தில் எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கம் 1990-களில் தீவிரமாக செயல்பட்டபோது, பாவலர் பொன்.கருப்பையா எழுதிய ‘எண்ணும் எழுத்தும் அறிந் தால், இந்த மண்ணில் வாழ்க்கையே எளிதாம்..’ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. ‘கற்ற ஒருவர் கல்லாத 10 பேருக்கு பாடம் சொல்லித் தாருங்கள்’ என்று அறிவொளி இயக்கம் தன்னார்வத் தொண்டர்களை அழைத்தது. கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போது ‘படித்த ஒருவர், படிப்பில் பின்தங்கி நிற்கும் 20 குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்’ என்று அழைக்கிறது ‘எண்ணும் எழுத்தும்’ வாசிப்பு இயக்கம்.

இதுதொடர்பாக ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தை நடத்தி வரும் யுரேகா அறக்கட்டளை யின் இயக்குநர் டாக்டர் அ.ரவிசங்கர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘எண்ணும் எழுத்தும்’ என்ற இயக்கத்துக்கு இப்போது என்ன தேவை? இந்த கேள்வி எல்லோருக் குமே எழும். மிக அவசர, அவசியமான தேவை இப்போது இருக்கிறது. தங்கள் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாப் பெற்றோருக்கும் அதிகரித்திருக்கிறது கடன் வாங்கியாவது படிக்கவைக்கிறார்கள்.

படிக்க தெரியாத குழந்தைகள்

ஆனால், குழந்தைகள் படிக்கிறதா? அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி படிக்கும் கிராமப்புற குழந்தைகளில் பாதிபேருக்கு மேல் தமிழை வாசிக்கவோ, கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற சாதாரண கணக்குகளைக்கூட போடவோ முடியவில்லை. ‘அசர்’ (ASER-2014) என்ற கல்விக் கணக்கெடுப்பு ஆய்வு இதைச் சொல்கிறது. பல கிராமங்களுக்கு நேரடியாக கள அனுபவமாகச் சென்று இந்த நிலையைக் கண்டு வருந்தியிருக் கிறேன். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தின் நோக்கம்.

நான் படித்து, வளர்ந்தது எல்லாம் சென்னைதான். எப்போதுமே குழந்தைகளின் கல்வி மீதும், கணக்குப் பாடத்தின் மீதும் எனக்கு தனி ஆர்வம் உண்டு. 2008-ல் சமச்சீர்க் கல்வித் திட்டம் தமிழகத்தில் அறிமுகமானபோது, 6-ம் வகுப்பு கணக்குப் பாடத்தை குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வகையில் தொகுத்து வழங்கி னோம். ‘எண்கள் பிறந்த கதை’ என்று கணக்கின் வரலாற்றை சிறு நூலாகவும் எழுதினேன்.

பிறகு, நண்பர்களோடு சேர்ந்து, கிராமங்களுக்குச் சென்று குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்கான பணி களை செய்துவந்தேன். அப்போது தான், கல்வியில் பின்தங்கியிருக்கிற குழந்தைகள் தமிழ் வாசிக்கவும், எளிய கணக்குகளைப் போடவும் விளையாட்டு முறையில் கற்றல் உபகரணங்களை உருவாக்கிக் கொடுத்தோம். இது நல்ல மாற் றத்தை உருவாக்கியது. தயங்கி நின்ற பல குழந்தைகள் ஆர்வமாக வாசித்தார்கள். இந்த கோடை விடுமுறைக்குள் எப்பாடுபட்டாவது குழந்தைகளை வாசிக்க வைத்துவிட வேண்டும் என்ற பேராவலோடு ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கத்தை தொடங்கினோம்.

கோடை விடுமுறையில் வசதி யான வீட்டுக் குழந்தைகள் நிறைய செலவழித்து கம்ப்யூட்டர் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், நீச்சல் பயிற்சி என்று கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். வசதியில்லாத ஏழைக் குழந்தைகள் படிக்கவே சிரமப்படுகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மே 15-ம் தேதி தொடங்கி, ஜூன் 30 வரை தினமும் ஒரு மணிநேரம் வாசிப்பு வகுப்பை நடத்தினால், தமிழை சரளமாக வாசிக்கவும், கணக்குகளைப் போடவும் தெரிந்து கொள்வார்கள். அதேநேரம், அந்த பயிற்சியானது அவர்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பதால், இதற்கென எளிய கற்றல் உபகரணங்களையும் உருவாக்கினோம்.

கற்றல் உபகரணங்கள் இலவசம்

இந்த வாசிப்பு இயக்கத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ‘எண்ணும் எழுத் தும்’ வகுப்புகளை நடத்த 40-க் கும் மேற்பட்ட தன்னார்வ கல்வி அமைப்புகள் முன்வந்திருக் கின்றன. இது நல்ல சமூக மாற்றத் துக்கான அறிகுறி. தமிழகத்தின் எந்த பகுதியிலும் யாராவது ஆரம் பக் கல்வி படிக்கும் 20 குழந்தை களுக்கு இலவசமாக வகுப்பு நடத்த தயார் என்றால், அவர் களுக்குப் பயிற்சியும் கற்றல் உபகரணங்களையும் இலவசமாக வழங்குகிறோம்.

இவ்வாறு ரவிசங்கர் கூறினார்.

ரவிசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x