

விரைவு ரயில்களில் அபாய சங்கிலியை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்தார்.
விரைவு ரயில்களில் அவசர தேவைக்கு பயன்படுத்தும் அபாய சங்கிலியை சிலர் அவசியம் இல்லாத சிறிய காரணங்களுக்காக இழுத்து ரயிலை நிறுத்துவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த சம்பவங்கள் குறிப்பாக உத்தரபிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் அதிகமாக நடக்கிறது. இதனால் ரயில் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ரயில்வே துறைக்கு ரூ.3 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அபாய சங்கிலியை நீக்கிவிட்டு, மாற்றுத்தீர்வாக அவசர தேவை யின் போது ரயில் ஓட்டுநரின் செல்போன் எண்ணில் அழைத்து ரயிலை நிறுத்திக் கொள்ளும் வசதியை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில்களில் அபாய சங்கிலியை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அபாய சங்கிலியை தவறுதலாக பயன்படுத்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.