நெல்லை துணை மேயருக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரிக்க உத்தரவு
நெல்லை துணைமேயருக்கு எதிரான முறைகேடு புகார் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை தச்சநல்லூர் தேனீர் குளத்தைச் சேர்ந்த என்.சங்கர பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நெல்லை மாநகராட்சி மேயர் பதவி காலியாக இருந்தபோது, துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன் மேயர் பொறுப்பு வகித்தார். அப்போது ஜெகநாதன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நெல்லையில் நல்ல நிலையில் இருந்த பல சாலைகளை புதிதாக அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த டெண்டரை துணைமேயரின் உறவினர் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு வழங்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் மேயர் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், சாலை அமைக்க பாலசுப்பிரமணியனுக்கு டெண்டர் உத்தரவு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர், நெல்லை துணை காவல் கணகாணிப்பாள ருக்கு 28.12.2014-ல் புகார் அனுப் பினேன். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ். நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.திருநாவுக்கரசு வாதிட்டார். அரசு வழக்கறிஞர் மயில்வாகன ராஜேந்திரன் வாதிடும்போது, ‘நெல்லை துணைமேயர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த, நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக தலைமை பொறியாளர் பி.வெங்கடாச்சலம் விசாரணை அதிகாரியாக 13.4.2015-ல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதையடுத்து, ‘ஒருவர் மீது ஊழல் புகார் வந்தால் அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதன்படி மனுதாரரின் புகார் தொடர்பாக, நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண் காணிப்பாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.
