

வழக்கு முடிந்த உடன் அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
காட்பாடி தாலுகா, கழிஞ்சூர் அருகே உள்ள ராமு ஆசிரம குருகுலத்தின் 232-வது மாதாந்திர வழிபாடு நிகழ்ச்சி மற்றும் முப்பெரும் விழா நேற்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் பல நன்மைகள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக வங்கதேச நாட்டுடன் இருந்து வந்த எல்லைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல சீனாவுடன் மோடி நட்புறவை ஏற்படுத்தியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி. நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிந்த உடன் அங்கு ராமர் கோயில் கட்டப்படும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக கோட்டியிடுவது குறித்து தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையை இந்தியா - இலங்கை பிரச்சினையாக பார்க்க முடியாது. இது தமிழக மீனவர்களுக்கும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மீனவர்களுக்கும் இடையே நடக்கும் தொழில் போட்டி பிரச்சினை ஆகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு ஆழ்ந்து பரிசீலித்தபோது, இலங்கை மீனவர்கள் பாரம்பரிய படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். ஆனால் தமிழக மீனவர்கள் அதைவிட பல மடங்கு சக்தி வாய்ந்து விசைப் படகுகளை கடலுக்குள் செலுத்தி மிகவும் ஆழமான பகுதிகளுக்கு சென்று மீன்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது.
இலங்கை அரசிடம் அந்நாட்டு மீனவர்கள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவால், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக தலைமையின் கீழ் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் சேர்ந்து பாஜக தேர்தலை சந்திக்கும்’’ என்றார்.