Published : 04 Mar 2014 21:38 pm

Updated : 05 Mar 2014 08:05 am

 

Published : 04 Mar 2014 09:38 PM
Last Updated : 05 Mar 2014 08:05 AM

காங்., திமுக மீது சரமாரி தாக்கு: பாஜக-வை விமர்சிக்காத ஜெ.

கடந்த இரு தினங்களாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை கடுமையாக சாடிப் பேசி வருகிறார்.

அதேவேளையில், தேச அளவில் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியில் அதிமுக இடம்பெற்றுள்ள நிலையில், பாஜகவை விமர்சிப்பதை ஜெயலலிதா தவிர்த்து வருகிறார்.


காஞ்சிபுரத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, ஸ்ரீபெரும்புதூரின் பிரச்சாரம் செய்தார். இவ்விரு தொகுதிகளிலும் பாஜக-வை பற்றி அவர் ஒரு வார்த்தை கூட விமர்சித்துப் பேசவில்லை என்பது கவனிக்கத்தது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்யும்போது முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகின்ற தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து; பொருளாதார சீரழிவிலிருந்து; ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்திய நாட்டை விடுவிப்பதற்காக நடைபெறுகின்ற தேர்தல், உங்களின் துன்பங்களை போக்குகின்ற தேர்தல், உங்களை துயரங்களிலில் இருந்து விடுவிக்கின்ற தேர்தல்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்னென்ன பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை சொல்லி மாளாது.

எல்லா விதத்திலும் சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்து ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. தமிழ் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. இப்படி காங்கிரசும், தி.மு.க.வும் சேர்ந்து சாமானிய ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிட்டது.

இப்படிப்பட்ட கொடுங்கோல் அரசிடமிருந்து இந்திய நாட்டை காப்பாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. தமிழ் நாட்டிற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து பெறக் கூடிய காலம் கனிந்துவிட்டது. இந்த வாய்ப்பின் மூலம் உங்கள் வாக்குரிமையை நீங்கள் தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு செலுத்த வேண்டும் என்று சொல்வதற்காகத் தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.

கடந்த 33 மாத கால ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் மீறி தமிழக மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களை வளர்ச்சித் திட்டங்களை என்னால் தர முடியுமோ அதையெல்லாம் அளித்து இருக்கிறேன்; அளித்து கொண்டு வருகிறேன்.

எந்த ஒரு மனிதரும் பசியால் வாடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இது போன்றதொரு திட்டம் செயல்பாட்டில் இல்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

விவசாய உற்பத்திக்கு முக்கியமாக தேவைப்படுவது உரம். இந்த உரத்தைக் கூட வெளி நாடுகளிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு மத்திய அரசு தேவை தானா என்பதை நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க-விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

இலங்கை அரசுக்கு சாதகமாகத் தானே இந்திய அரசு நடந்து கொண்டது? இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்த தி.மு.க. வற்புறுத்தியதா? இல்லையே! இப்படிப்பட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்ற உறுதியை நீங்கள் எடுக்க வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

பாதுகாப்புத் துறையையே பாதுகாப்பற்றது ஆக்கிவிட்ட அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. கடந்த பத்து ஆண்டுகளாக முப்படையை நவீனமயம் ஆக்கும் நடவடிக்கைகள் எதையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுக்கவில்லை. கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கக் கூடிய மின்கல அமைப்புகளை வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து இதன் காரணமாக இந்தியக் கடற்படையின் வன்பொருள்கள் பாதிக்கப்படும் என்று 2009 ஆம் ஆண்டே மத்திய தணிக்கைத் துறை கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதன் விளைவு சென்ற ஆண்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மும்பை அருகே தீக்கு உள்ளாகியது. இதில் 18 கடற்படை வீரர்கள் மரணம் அடைந்தனர். இதே போன்று இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் அண்மையில் தீ விபத்துக்கு உள்ளாகி 2 கப்பற்படை வீரர்கள் மரணமுற்றனர்; 7 பேர் காயமடைந்தனர். ஆறு புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கடற்படையிடம் இருந்து கோரிக்கை விடப்பட்டும் அதன் மீது மத்திய அரசு பாராமுகமாக இருந்ததே இது போன்ற விபத்துகளுக்கும்; கப்பற்படை வீரர்கள் மரணமுற்றதற்கும் காரணம்.

இந்த விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று கப்பற்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் கோரிக்கையை நிராகரித்தவர்கள் இன்னமும் பதவியிலேயே ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். முப்படைகளும் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று ஒவ்வொரு தளபதியும் கடந்த 60 ஆண்டுகளாக ஒவ்வொரு பாரத பிரதமருக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு பதில் அனுப்பக் கூட எந்த பாரதப் பிரதமருக்கும் நேரமில்லை. இதன் விளைவு கடற் படையிடம் போதுமான கப்பல்களோ அல்லது நீர்மூழ்கி கப்பல்களோ தற்போது இல்லை. இதே போன்று விமானப் படையிடமும் போதுமான விமானங்கள் இல்லை. ராணுவத்திடமும் நவீன ஆயுதங்கள் மற்றும் முக்கிய உபகரணங்கள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இன்னும் சொல்லப் போனால் தேவையான ஆள் பலமும் இல்லை.

நாட்டைப் பாதுகாக்கும் முப்படைகளையே அலட்சியப்படுத்தும் மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் தலையெழுத்தை உங்களின் தலைவிதியை மாற்றி அமைக்கப் போகும் தேர்தல். மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல்; ஹெலிகாப்டர் ஊழல்; நிலக்கரி ஊழல்; காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மூலம் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவதை குறிக்கோளாகக் கொண்டு வருகின்ற தேர்தலில் நீங்கள் உங்கள் கடமையை ஆற்ற வேண்டும்.

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும்" என்றார் ஜெயலலிதா.


அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாதேர்தல் பிரச்சாரம்மக்களவைத் தேர்தல்நாடாளுமன்றத் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x