Published : 02 Jun 2015 04:24 PM
Last Updated : 02 Jun 2015 04:24 PM

எல்லையில் பணிபுரியும் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக தோள்களில் தேரை சுமந்த பெண்கள்

வத்தலகுண்டு அருகே புனித சவேரியார் ஆலய விழாவில், இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள், விரைவில் திருமணம் நடக்கவும், எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் தேரை தோள்களில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ளது மேலகோவில்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சிப்பாய் முதல் உயர் பொறுப்பு வரை (80 சதவீதம்) பதவியில் உள்ளனர். நாட்டை பாதுகாக்கும் ராணுவத்துக்கு வீரர்களை தயார்படுத்தி அனுப்புவதால், இந்த ஊரை ராணுவ கிராமம் என்றுதான் சுற்றுவட்டாரத்தில் அழைக்கின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும், மே 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை, ஒரு மாதம் ஆரோக்கிய மாதா நவநாள் திருவிழா நடைபெறுகிறது. ராணுவத்தில் வேலைபார்க்கும் இளைஞர்கள், விடுமுறையில் இந்த விழாவுக்காக குடும்பத்தினரைப் பார்க்க கிராமத்தில் கூடுவர். அதனால், ஒரு மாதம் முழுவதும் கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

திருவிழா நாட்களில் இங்குள்ள சவேரியார் ஆலயத்தில் ஜெபம், தவப்பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், திருப்பலி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நவநாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. வத்தலகுண்டு உதவி பங்குத் தந்தை பிரான்சிஸ் சேவியர் திருப்பலியை நடந்தினார். இதனைத் தொடர்ந்து, மாதாவின் தேர்ப் பவனியில் இளைஞர்கள், பெண்கள், நேர்த்திக் கடனாக தேரை தோளில் சுமந்து சென்றனர். ஒவ்வொரு குழுவினரும் குறிப்பிட்ட தூரம் வரை தேரை தோளில் சுமந்தனர்.

இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ராணுவத்தில் இருக்கும் தங்களது சகோதரர்கள், கணவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், ஆண்கள் துணையின்றி தாங்களே தேரை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் சிலர் கூறியதாவது:

ராணுவ வீரர்களுக்கு ஆண்டுக்கு ஓரிருமுறைதான் விடுமுறை அளிப் பார்கள். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தவறாமல் மே மாதம் விடுமுறையில் கிராமத்துக்கு வந்து விடுவர். அதுமட்டும் இல்லாது, ராணுவத்தில் சேரத் தயாராகும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தேரை தோளில் சுமந்து செல்வர். இந்த விழாவில் மாதாவை வேண்டினால் நினைத்த காரியம் நடக்கும் என்பது சுற்றுவட்டார கிராம மக்களுடைய நம்பிக்கையாக உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x