ஒரு பவுன் ரூ.19,992-க்கு சரிவு: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

ஒரு பவுன் ரூ.19,992-க்கு சரிவு: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்
Updated on
1 min read

சென்னையில் பவுன் விலை நேற்று ரூ.19,992 ஆக குறைந்தது.

கடந்த மே மாதத்தில் ஒரு பவுன் விலை அதிகபட்சமாக ரூ.20,952-க்கு விற்பனை செய்யப் பட்டது. ஒரு கிராம் ரூ. 2,619-க்கு விற்பனையானது. ஆனால், கடந்த 6 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 21-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.20,440 ஆக இருந்தது. அடுத்த 3 நாட்களிலும் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்றும் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தது. நேற்று மாலை நிலவரப்படி, பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.19,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் விலை ரூ.2,499 என்ற அளவில் இருந்தது. கடந்த 4 மாதங்களில் ஒரு பவுன் (22 கேரட்) விலை ரூ.20,000-க்கு கீழே இறங்கியது இதுவே முதல் முறை.

இதுகுறித்து தமிழ்நாடு தங்க நகை, வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியபோது, ‘‘அமெரிக்க டாலர் விலை சரிவு, கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்றவை காரணமாக ஐரோப்பியக் கண்டத்தில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. அதன் தாக்கத்தால், இந்தியாவில் தங்க நகை பரிவர்த்தனை குறைந்திருக்கிறது. விலை குறையும் போக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைவதால் நுகர்வோர் அதிக அளவில் நகைக் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in