

அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல், இயங்கி வருகிறது சீர்காழியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி.
நாகை மாவட்டம் சீர்காழி நகரின் மையப்பகுதியில் சட்டைநாதர் கோயில் வடக்குமட விளாகத்தில் இயங்கி வருகிறது நகராட்சி மேல்நிலைப்பள்ளி.
இப்பள்ளியின் மொத்த பரப்பளவு 3,024 சதுர அடி. அதில் 2,000 சதுர அடியில் மட்டுமே வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. பள்ளியில் 14 வகுப்புகள் உள்ள நிலையில், 10 வகுப்பறைக் கட்டிடம் மட்டும் உள்ளது. இந்த வகுப்பறைகளும் 15 அடிக்கு 10 அடி என்ற குறுகிய அளவில் உள்ளதால், போதுமான காற்றோட்டம், வெளிச்சம் இல்லாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மீதமுள்ள வகுப்புகள் மாடிப்படியின் கீழும், மரத்தடியிலும் நடைபெறுகின்றன.
பள்ளியில் 400 மாணவிகள் உட்பட 650 பேர் பயில்கின்றனர். 7 ஆசிரியைகள் உட்பட் 21 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், அனைவருக்கும் ஓர் சிறிய கழிப்பிடம் மட்டுமே உள்ளது. அதிலும் தண்ணீர் வசதி கிடையாது. கழிப்பிடத்தை முதலில் மாணவிகளும், பின்னர் மாணவர்களும் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.
நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்டதே தவிர, பள்ளியின் அடிப்படை வசதிகள், கட்டிடங்கள் தேவைக்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை. மேலும், ஆய்வகம், கணினி மையம், சாப்பாட்டுக் கூடம், நூலகம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளும் இல்லை.
பள்ளியின் அமைவிடம் குறைந்த அளவிலான இடத்தில் உள்ளதால் வேறு புதிய கட்டிடங்களை இங்கு அமைக்க முடியவில்லை எனக் கூறப்பட்டது.
அதனால் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், கல்வித் துறை, நகராட்சி, மாவட்ட நிர்வாகம் இதுவரை செவிசாய்க்கவில்லை.
இது குறித்து நகராட்சி மற்றும் கல்வித் துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, “பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, புளிச்சகாட்டு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் மற்றும் நடைமுறைகள் முடிந்தவுடன் அங்கு அனைத்து வசதிகளுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டு, அங்கு பள்ளி செயல்படத் தொடங்கும்” என்றனர்.
“கல்வி கற்பது அடிப்படை உரிமை என்ற நிலையில், குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிறிய வகுப்பறை கட்டிடங்களில் மாணவர்கள் கல்வி கற்பது அவலம்.
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நல்ல தரமான கல்வியை மாணவர்களுக்கு தராமல், ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதால் நாடு எந்தவிதமான வளர்ச்சியையும் பெற்றுவிடாது” என வேதனையை வெளிப்படுத்தினர். இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துள்ள பெற்றோர்கள்.