

வாகன சோதனையில் வரி செலுத்தாத வெளிமாநில ஆம்னி பேருந்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் வழியாக பல்வேறு வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் சேவை வரி செலுத் தாமல் இயக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படும் பேருந்துகள் பர்மிட் இல்லாமல் இயங்கி வருவதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்துத் துறைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் உத்தரவிட்டார்.
அதன்படி, வேலூர் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் காளியப்பன் மற்றும் ராம்குமார் தலைமையி லான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்தின் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்து கோவையில் இருந்து 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் செல்வதும், அந்த பேருந்து தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இயக்கப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆம்னி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு வரியுடன் அபராதத் தொகையை விதித்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள் ளனர்.