

ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கிண்டி காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். டிராஃபிக் ராமசாமியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று காலை கிண்டி காவல் நிலையத்துக்கு சென்ற டிராஃபிக் ராமசாமி. ஒரு புகார் மனுவை கொடுத்து வழக்கு பதிவு செய்யுமாறு கூறினார்.
புகாரை வாங்கிப் படித்த காவலர்கள் அதிர்ந்து விட்டனர். முதல்வர் ஜெயலலிதா மீதும், அதிமுக ஆதரவு பத்திரிகை நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரில் கூறப்பட்டிருந்தது. உடனே காவலர்கள், ‘ஆய்வாளர் வந்த பிறகு அவரிடம் புகார் மனுவை கொடுங்கள்’ என்று கூறினர். அதை ஏற்காத ராமசாமி, காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக ஆதரவு பத்திரிகையில் எனது உயிருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் ஜெயலலிதா மீதும் பத்திரிகை நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி புகார் கொடுக்க வந்திருக்கிறேன். புகாரை வாங்க மறுத்தால் போலீஸார் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்’’ என்றார்.
சிறிது நேரத்தில் ஆய்வாளர் வந்ததும் அவரிடம் புகார் மனுவை கொடுத்துவிட்டு, டிராஃபிக் ராமசாமி புறப்பட்டு சென்றார்.