

இந்தியாவுக்குள் 600 கண்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும், நொய்டாவில் 6 கண்டெய்னர்கள் பிடிபட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றக் கிளையில் பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சிவகாசியில் சீனப் பட்டாசு ஊடுருவல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடக்கோரி ஏ.முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, விருது நகர் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆகியோர் ஆஜராகவும், சி.பி.ஐ. மற்றும் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட் டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு 4-வது நாளாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், எஸ்.பி. மகேஸ்வரன், சுங்கத்துறை அதிகாரிகள் நிசார்பாஷா, சந்திரசேகரன், வெடிபொருள் கட்டுப்பாட்டு தலைமை துணை ஆணையர் குப்தா, துணை ஆணையர் ஷேக் உசேன் ஆகியோர் ஆஜராகினர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், சீனப் பட்டாசு பிடிபட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பட்டாசு பார்சல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் சீனப் பட்டாசு பிடிபடவில்லை என்றார்.
சி.பி.ஐ. தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்வேலன், சுங்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் விஜயகார்த்திகேயன் வாதிட்டனர். பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தரப்பு வழக்கறிஞர் சாந்தாராம் நடராஜ் வாதிடுகையில், சீனப் பட்டாசுகள் 600 கண்டெய்னர்களில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதில் 6 கண்டெய்னர்கள் நொய்டாவில் பிடிபட் டுள்ளன. மும்பை, டெல்லி உள்பட பல இடங்களில் சீனப் பட்டாசுகள் பிடிபட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சீனப் பட்டாசுகள் வெடித்தால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. போலீஸார் பிடித்த சீனப் பட்டாசுகளை, வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஆய்வுக்காக உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பிடிபட்டு 8 நாட்களாகியும் இதுவரை வழங்கவில்லை.
உடனடியாக சீனப் பட்டாசு பார்சலை வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைக்க வேண்டும். அதை ஆய்வுக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
600 கண்டெய்னர்களில் சீனப் பட்டாசு வந்ததாகக் கூறுகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்தில் தினமும் 500 கண்டெய் னர்கள் வருவதாகவும், ஆனால், 20 கண்டெய்னர்களை மட்டும் ஸ்கேன் செய்வதற்கு அங்கு வசதியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் பட்டாசு வருகையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சுங்கத் துறை மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் சீனப் பட்டாசு தொடர்பாக பதிவான வழக்கு விவரங்களை போலீஸாரும், சிவகாசியில் சீனப் பட்டாசு பிடிபட்ட பிறகு இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சி.பி.ஐ. மற்றும் வெடிமருந்து கட்டுப்பாட்டுத் துறை ஞாயிற்றுக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர் நீதிபதிகள்.