

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி மற்றும் கோனாங்குட்டை காட்டுப் பகுதியில் அழிந்துவரும் பெருங் கற்கால நினைவுச் சின்னங்களை ஆய்வு செய்து பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.
பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியர் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலம் கற்கால மனிதர்களின் வாழ்வியல் இடத்தை கண்டுபிடிக்க முடியும் என்பது, அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவர்களது கோரிக்கையை தொல்லியல் துறை அலட்சியப் படுத்துகிறது. மேலும், ஆய்வு என்ற பெயரில், பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை சிதைத்து வருகின்றனர். அதேபோல், சில தனி நபர்களும் சிதைக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். அதற்கு காரணம், பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் தங்கம் இருக்கும் என்ற தவறான எண்ணம்தான்.
இதுகுறித்து செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பா.பிரேம் ஆனந்த் கூறும் போது, "தென்பெண்ணை ஆறு மற்றும் செய்யாறு வழித்தடத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் கல்வட்டங்களை அதிகளவில் காணமுடிகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தொரப்பாடி மலை அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளன. சில கல்வட்டங்களில் உள்ள கற்கள் சிதையாமலும், சில சிதைக்கப்பட்ட நிலையிலும் உள்ளன. 21 மீட்டர் சுற்றளவும், 6 மீட்டர் அகலமும் மற்றும் 10 மீட்டர் சுற்றளவும், 3 மீட்டர் அகலமும் என்று இருவேறு கல்வட்ட அளவு கள் காணமுடிகிறது.
ஒரு பெரிய குழியை தோண்டி, நான்கு பலகைக் கற்களை கொண்டு ஒன்றுடன் ஒன்றாக இணைத்து சதுர வடிவில் நிலை நிறுத்தி கல்லறை உருவாக்கப்படுகிறது. அதன் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியில் பெரிய பலகை கல்லை கொண்டு மூடுகின்றனர். பின்னர் குழி மீது சிறிய கற்கள் அல்லது கூழாங்கற்கள் கொட்டப்படு கின்றன. அதன்பிறகு, உருண்டை வடிவில் உள்ள பெரிய கற்களை கொண்டு வட்டமாக அடுக்கி வைத்து ‘கல் வட்டம்’ உருவாக்கப்படுகிறது. கல்வட்டம் வடிவில் இறந்தவர்களை அடக்கும் செய்யும் முறை கி.மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
கல் வட்டங்களை ஏற்படுத்தி இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை கற்கால மனிதர்களிடையே இருந்துள்ளது. அதன் மறு உருவமாகத்தான், நினைவுச் சின்னங்கள் அமைக்கும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும். கல் பதுக்கை, கல் திட்டை, கல் வட்டம், கல் குடுவை என்று நினைவுச் சின்னங்களைப் பல பிரிவுகளாக தொல்லியில் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.
செங்கம் அருகே கோனாங் குட்டை காட்டுப் பகுதியில் 500-க் கும் மேற்பட்ட கல்வட்டங்களை காணலாம். ஜவ்வாதுமலை கல்யாணமந்தை கிராமத்திலும் கல் வட்டங்கள் உள்ளன. பெருங்கற் கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும்" என்றார்.