

வெளிநாடுகளில் உள்ள அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணாமல் போன விமானத்தை தேட வேண்டும் என்று விமானியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் ரோந்து விமானம் கடந்த 8-ம் தேதி காணாமல் போனது. அந்த விமானத்தையும் அதிலிருந்த விமானிகள் டி.எஸ்.வித்யாசாகர், சுபாஷ் சுரேஷ் மற்றும் எம்.கே.சோனி ஆகியோரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கப்பற்படை, தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகம், இந்திய விமானப்படை ஆகியவை இப்பணியில் ஈடுபட் டுள்ளன.
இந்நிலையில் விமானி எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா சோனி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய கடலோர காவல் படையும், இந்திய கடற்படையும் எங்களுக்கு குடும்பத்தைப் போன்றது. அவர்களிடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டு முடிந்த அளவுக்கு அவர்கள் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் ஆய்வுக் கப்பலான ‘சாகர் நிதி’யைக் கொண்டு தேடி வருகின்றனர். அதன் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் நீர் மூழ்கி கப்பல்கள் 400 மீட்டர் ஆழம் வரைதான் செல்லும். காணாமல் போன விமானத்திலிருந்து 800 மீட்டர் ஆழத்திலிருந்து சிக்னல் கிடைத்ததாக கூறுகின்றனர். மற்ற நாடுகளில் நம்மிடம் இருப்பதை விட நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.
வெளிநாட்டு தொழில்நுட்பம்
கடந்த ஆண்டு மலேசிய விமானம் காணாமல் போனபோது மற்ற நாடுகளின் உதவி நாடப்பட்டது. அதே போல் இந்திய அரசும் வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப உதவி பெற முன் வர வேண்டும். அந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு தேடும் பணிகளை விரைவு படுத்தலாம்.
நமது உயிரை காப்பாற்றும் வீரர்களின் உயிர் மிகவும் விலை உயர்ந்தது. அவர்களது உயிரை காப்பாற்றவும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும் நமது தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
திறமையானவர்கள்
காணாமல் போன விமானத்தில் இருந்த மூன்று விமானிகளும் மிகவும் திறமையானவர்கள். எனது கணவர் எம்.கே.சோனி, ஏழாவது தகுதியுள்ள விமானத்தை வழி நடத்தும் பயிற்றுநராக தேர்வு செய்யப்பட்டவர்.
மற்ற இருவருக்கும் 2000 மணி நேரங்களுக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. எனவே, இவர்களால் தவறு ஏற்பட்டிருக்க வாய்ப் பில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.
மாநில அரசு உதவி
இந்திய பாதுகாப்புத் துறை யிலிருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு டிவிட்டரில் கடிதம் அனுப்பியுள்ளேன். மாநில அரசை நாங்கள் இன்னும் அணுகவில்லை. நிலத்தில் தேடு வதற்கான உதவிகளை மாநில அரசு அளித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விமானி சுபாஷ் சுரேஷின் மனைவி தீபா சுரேஷ், டி.எஸ். வித்யாசாகரின் மனைவி சுஷ்மா தவாலா ஆகியோரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரச்னையில் தலையிட வேண்டும் என்று டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.