Published : 08 Jun 2015 10:18 AM
Last Updated : 08 Jun 2015 10:18 AM

கார் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி: மற்றொரு விபத்தில் 20 பேர் காயம்

நாகை மாவட்டம் சீர்காழியில் நேற்று காலை கார் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

அரக்கோணம் பானவாக்கத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்(25). சென்னையில் சினிமா துறையில் பணியாற்றி வந்தார். இவரும், நண்பர் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த மணிகண்டனும்(25) நேற்று முன்தினம் இரவு சென்னையிலி ருந்து காரில் காரைக்கால் புறப் பட்டுள்ளனர்.

சீர்காழி புறவழிச் சாலையில் நேற்று காலை கார் வந்து கொண்டிருந்தபோது, கார் மீது அரியலூரில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது.

தகவலறிந்து வந்த சீர்காழி போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினார், காரில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டனர். அப்போது, பரசுராமன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டன், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீஸார் விசாரணை நடத்தி, லாரி ஒட்டுநர் திருவிடைமருதூர் செல்வத்தை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு வழியாக நேற்று முன்தினம் இரவு சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த தாஸ், இவரது உறவினர் கள் காரில் மூணாறுக்கு சென்றுள்ளனர். சென்னை ஆவடியைச் சேர்ந்த அன்னமேரி (55), அவரது உறவினர்கள் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கட்டகாமன்பட்டி அருகே வந்தபோது காரும், வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் கார், வேனில் பயணம் செய்த தாஸ் (37), முருகன் (37), மேரி பூங்கோதை (45) அன்னமேரி (55), கனிமொழி, அடைக்கலநாதன் (57), தெரசா (50), கலாவதி (53) உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய இவர்களை வத்தலகுண்டு தீயணைப்பு நிலையத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

வழிப்பறி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னையில் தங்கி சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு இன்னும் வாகனப் பதிவு செய்யவில்லை.

அந்த பைக்கில், நண்பர்கள் இருவருடன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அடுத்த பிள்ளைச்சத்திரம் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அவர்களை மறித்தனர். மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கிவிட்டு, புதிய பைக் மற்றும் நவீன செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

படுகாயமடைந்த மணிகண்டன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x