ஒருதலை காதலால் விபரீதம்: புதுச்சேரியில் கல்லூரி வளாகத்தில் பொறியியல் மாணவிக்கு கத்திகுத்து - பட்டதாரி ஆசிரியர் போலீஸில் சரண்

ஒருதலை காதலால் விபரீதம்: புதுச்சேரியில் கல்லூரி வளாகத்தில் பொறியியல் மாணவிக்கு கத்திகுத்து - பட்டதாரி ஆசிரியர் போலீஸில் சரண்
Updated on
1 min read

புதுச்சேரி அருகே கலித்தீர்த்தாள் குப்பத்தில் ஒருதலைக் காதலால் பொறியியல் கல்லூரி மாணவியை கல்லூரி வளாகத்திலேயே பட்டதாரி ஆசிரியர் கத்தியால் குத்தினார்.

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டு அருகே உள்ள கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் தாடையில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக அங்கு வந்த அவரது தந்தையும் மற்றும் சில மாணவர்களும், ஆசிரியர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி முடிந்த பிறகு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒருதலைக் காதல்

இந்த நிலையில் மாணவியை வெட்டிய அந்த இளைஞர் திருபுவனை போலீஸில் சரணடைந்தார். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுகுமார்(23) என தெரிந்தது. அந்த மாணவி படித்து வரும் அதே கல்லூரி வளாகத்தில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரில் பி.எட் முடித்து இருக்கிறார்.

கல்லூரி அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்தபோது அந்த மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். காதலை ஏற்க மறுத்ததால் அவரைக் கத்தியால் சுகுமார் வெட்டியுள்ளார். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in