திண்டுக்கல் அரசுப் பேருந்தில் போலி டிக்கெட்: பயணிகள் போராட்டம்

திண்டுக்கல் அரசுப் பேருந்தில் போலி டிக்கெட்: பயணிகள் போராட்டம்
Updated on
1 min read

திண்டுக்கல்லில் அரசு பஸ்ஸில் நடத்துநர் கொடுத்த டிக்கெட் போலி எனக் கூறி பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் ரூ. 500 அபராதம் விதித்ததால் அனைத்து பயணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் இருந்து நேற்று மாலை பழநிக்கு புறப்பட்ட அரசு பஸ்ஸில் தஞ்சாவூரைச் சேர்ந்த சாமிநாதன், அவரது நண்பர்கள் ரவி, செந்தில்குமார் மற்றும் 2 பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

பஸ்ஸில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நடத்துநராக ராதாகிருஷ்ணன் என்பவர் இருந்தார். திண்டுக்கல் அருகே பஸ் வந்ததும், மதுரை சிறப்பு டிக்கெட் பரிசோதனை மண்டல மேலாளர் சேஷாத்திரி, டிக்கெட் பரிசோதனை ஆய்வாளர்கள் பயணிகளுடைய டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது சாமிநாதன் வாங்கிய டிக்கெட்டில் ஒரு டிக்கெட் போலி எனக்கூறி அவருக்கு சேஷாத்திரி ரூ. 500 அபராதம் விதித்தார். நடத்துநருக்கும் மெமோ கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாமிநாதன், அவருடன் வந்த பயணிகள் நடத்துநரிடம்தான் டிக்கெட் வாங்கினோம் எனக்கூறினர். நடத்துநரும் அது, நான் கொடுத்த டிக்கெட்தான் என்று ஒப்புக் கொண்டார். ஆனாலும், சேஷாத்திரி பிடிவாதமாக போலி டிக்கெட்தான் என்றார்.

இதனால் அதிருப்தியடைந்த பயணிகள் சாமிநாதனுக்கு ஆதரவாக பஸ்ஸை நிறுத்தச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சேஷாத்திரி பயணிக்கு அபராதம் விதிக்காமல் நடத்துநருக்கு மட்டும் மெமோ கொடுத்து சென்றார்.

இதுகுறித்து திண்டுக்கல் மண்டலப் பொதுமேலாளர் மாணிக்கவாசகத்திடம் கேட்டபோது, நடத்துநர்கள் சில நேரம் கீழே கிடக்கும் டிக்கெட்டுகளை எடுத்து, மீண்டும் பயணிகளிடமே கொடுத்துவிட்டு பணத்தை தாங்களே வைத்துக் கொள்வர்.

இதை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in