

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி வத்தலகுண்டைச் சேர்ந்த தாய், மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்தவர் அப்துல்ஜபார். இவரது மனைவி ஜருல்ரைசானா (60) மற்றும் இவர்களின் மகன்கள் முகம்மது அன்சார் (40), அகமது ஆசாத் (35) ஆகிய 3 பேரும் சென்னை அடையாறு பகுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வத்தலகுண்டுக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளனர்.
பின்னர், மீண்டும் அதே காரில் நேற்று மாலை சென்னை திரும்பினர். இந்த கார், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் இடதுபுறத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜருல்ரைசானா, மகன்கள் முகம்மது அன்சார், அகமது ஆசாத் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவலறிந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி சங்கர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.