

கீதாபவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதற்கான சுயம்வரம் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நடக்கிறது.
இது தொடர்பாக கீதாபவன் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமார் கோயல் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கீதாபவன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வசதியற் றோருக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 248 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி சென்னையில் இலவச திருமணம் நடக்கிறது. இதற்கான மணமக்களை தேர்வு செய்வதற்கான சுயம்வரம் ஜூலை 19-ம் தேதி விழுப்புரத்திலும், ஜூலை 26-ம் தேதி திருவாரூரிலும், ஆகஸ்ட் 9-ம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 16-ம் தேதி ஈரோட்டிலும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையிலும் நடக்கிறது. திருமண தம்பதிகளுக்கு 2 கிராமில் தாலி, பட்டுவேட்டி, பட்டுசேலை, 52 வகையான சீர்வரிசைகள், 2 மாதத்துக்கான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும்.
சுயம்வரத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.geetabhavantrust.com மற்றும் www.htctmatri.com ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 044-22251584 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அறக்கட்டளை அறங்காவலர் கே.கே.குப்தா, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி.சிதம்பரநாதன், செயலாளர் பா.சிம்மசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.