

தமிழகம் முழுவதும் உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமை ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் நடத்தப்படும்.
ஆனால், இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் இதுவரை பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படாதது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் உருவாக்கி யுள்ளது.
தற்போது காலியாகவுள்ள 650 உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், 60-க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களையும் நிரப்புவதற்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வினை எந்த விதமான புகாருக்கும் இடம் கொடுக்காமல் நேர்மையான முறையில் நடத்திட வேண்டும். அப்போதுதான் கற்றல்-கற்பித்தல் பணிகள் தடையின்றி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.