ரேஷன் கடை முறைகேடுகளை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம்: தூத்துக்குடியில் புதிய நடைமுறை

ரேஷன் கடை முறைகேடுகளை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம்: தூத்துக்குடியில் புதிய நடைமுறை
Updated on
1 min read

ரேஷன் கடை முறைகேடுகளை படம்பிடித்து ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் அனுப்பும் புதிய நடைமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியர் ம.ரவிக்குமார் கூறும்போது, ‘ரேஷன் கடை முறைகேடுகளை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 94450 00370 என்ற செல்பேசி எண்ணுக்கு புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம்.

கோழிப்பண்ணைகள்

கோழிப்பண்ணை தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 161 கறிக்கோழி பண்ணைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு 135 பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. 26 பண்ணைகள் அமைக்கும் பணிகள் நடைபெறு கின்றன. நடப்பாண்டு மேலும் 50 கறிக்கோழி பண்ணைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணை அமைக்கும் செலவு ரூ.10.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதித் தொகையும் வங்கிக் கடன் மூலம் பெற உதவி செய்யப்படும்.

நாட்டுக் கோழிப்பண்ணையை பொறுத்தவரை இதுவரை 96 பண்ணைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 50 பண்ணைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க ரூ.1,29,500 செலவாகும். இதில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். எனவே, கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் அருகேயுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

10 அம்மா மருந்தகம்

தூத்துக்குடியில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடை கடந்த வெள்ளிக்கிழமையுடன் 288-வது நாளில் ரூ.4 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ஓராண்டு நிறைவு பெறும்போது ரூ.5 கோடி விற்பனையை தாண்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

தூத்துக்குடியில் 3 அம்மா மருந் தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்களில் மருந்துகள் 15 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மேலும் 10 அம்மா மருந்தகங்கள் திறக்கப்படும்.

தமிழகத்தில் முதலிடம்

பேறுகாலத்தின் போது தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்துள்ளது. குடும்ப கட்டுப்பாட்டில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கிராமப்புறங்களில் மட்டும் தாய்மார்கள் 7,438 பேர் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்வது குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு 19 ஆண்கள் மட்டுமே குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர்’ என்றார் ஆட்சியர்.

சவூதி அரேபியாவில் பணி யின் போது மரணமடைந்த ஓட்டப்பிடாரம் சவரிமங்கலத்தை சேர்ந்த குருசாமி நாராயணசாமி என்பவரின் குடும்பத்துக்கு ரூ. 74,013 நிவாரண உதவியை ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எஸ். கோபாலசுந்தரராஜ், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உமா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ் செல்வராஜன் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in