

வேளான் பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் தலைமை பொறியாளர் செந்திலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பாளைங்கோட்டை திருமால் நகரைச் சேர்ந்தவர் எஸ்.முத்துகுமாரசாமி (57). திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
பிப்ரவரி 20-ம் தேதி திருநெல்வேலி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் ரயில் முன் பாய்ந்து முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டார்.
வேளாண்மை துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முத்து குமாரசாமிக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும், பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் எதிரொலியாக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தலைமைப் பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இருவரும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதியன்று அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
செந்திலும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, செந்திலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை செந்தில் தினமும் சென்னை சிபிசிஐடி அலுலகத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.