Published : 29 Jun 2015 03:44 PM
Last Updated : 29 Jun 2015 03:44 PM

உலகில் அமைதி ஏற்பட மரங்களுக்கு திருமணம்: 33 ஆண்டாக கோயில் விழாவில் விநோத வழிபாடு

வத்தலகுண்டு அருகே உலக நன்மைக்காக, கோயில் திருவிழாவில் 33-வது ஆண்டாக அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தி விநோத வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் கருப்பண்ணசாமி பாண்டி கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித் திருவிழா, கடந்த 26-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, முதல்நாள் கருப்பண்ணசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 2-ம் நாள் விழாவில், நேற்று சுவாமிக்கு பொங்கல் படைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இந்த கோயில் விழாவில் ஒவ்வொரு ஆண்டும், சிவனின் உருவமாக அரச மரத்தையும், அம்மனின் உருவமாக வேப்ப மரத்தையும் கருதி, இரு மரங்களுக்கும் திருமணம் நடத்தி வழிபாடு நடத்துவர்.

அதேபோல 33-வது ஆண்டாக இந்த ஆண்டு விழாவிலும் மணமக்கள் போல அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் ஜோடித்து, இரு மரத்துக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

இதற்காக மணமேடை அமைத்து யாகம் வளர்த்து, கோயில் குருக்கள் திருநாவுக்கரசு திருமணம் நடத்திவைத்து, வேப்ப மரத்துக்கு தாலி கட்டினார். தொடர்ந்து பக்தர்கள், ஊர் பொதுமக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். பின்னர் அனைவருக்கும் தாம்பூலம் வழங்கி விருந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, இயற்கையான மரங்களை தெய்வங்களாக வழிபட்டு, அவற்றுக்கு திருமணம் நடத்தி வைத்தால் ஊரில் அமைதி நிலவும் என்பது ஐதீகம். 33 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் அடிக்கடி தகராறு, மோதல் ஏற்பட்டு வந்தது. அதனால், ஊரில் அமைதி நிலவ மரங்களுக்கு திருமணம் நடத்தினோம்.

அதன்பின், எங்கள் ஊரில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை. எங்கள் ஊரில் ஏற்பட்ட அமைதி, உலகம் முழுவதும் ஏற்பட, தொடர்ந்து கோயில் திருவிழாவில் மரங்களுக்கு திருமணம் நடத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x