Published : 06 May 2014 06:44 PM
Last Updated : 06 May 2014 06:44 PM

25% இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய 25 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் வழங்கப் போவதில்லை என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

கடந்த இரு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டின்கீழ் இலவசக் கல்வி வழங்கியதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை வழங்காததால் இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 2009 ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தொழில்நுட்பக் காரணங்களால் 2010 ஆம் ஆண்டிலிருந்து தான் அச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ஓர் ஆண்டு கூட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டில் இச்சட்டத்தின்கீழ் நிரப்பப்படவேண்டிய 58,619 இடங்களில் 23,248 இடங்கள், அதாவது வெறும் 40% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 3550 தனியார் பள்ளிகளில் சுமார் 1000 பள்ளிகளில் ஓரிடம் கூட ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. வரும் 2014 - 15 ஆம் ஆண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடைமுறைகள் கடந்த 2 ஆம் தேதி தொடங்கின. ஆனால், 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசோ அல்லது தனியார் பள்ளிகளோ தொடங்கவில்லை.

இந்த விஷயத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதை கடந்த 2 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் கடுமையாக கண்டித்திருந்தேன்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசக் கல்வி வழங்குவதற்காக மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை மே 10 ஆம் தேதி முதல் ஆய்வு செய்து சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை 14 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் விண்ணப்பங்களே வழங்கப்படாத நிலையில், அவற்றை எச்சரிக்கவோ அல்லது விண்ணப்பங்கள் வழங்கப்படுவதையும், மாணவர் சேர்க்கை முறைப்படி நடப்பதையும் உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தான் தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் ஒரு சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்திருப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி, இந்திய அரசியல் சட்டத்திற்கே விடப்பட்ட சவால் ஆகும். இதை மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தனியார் பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை என்பது போல தோன்றுகிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டம், கல்விக் கட்டண நிர்ணய நடைமுறை ஆகியவற்றை தனியார் பள்ளிகள் பெயரளவுக்குக் கூட மதிப்பதில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த அத்துமீறல்கள் தொடர்ந்தாலும் இதைத் தடுக்கவோ அல்லது தவறு செய்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முன்வரவில்லை. மாறாக, தமிழக அரசுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு தனியார் பள்ளிகளுக்கு துணிச்சல் வந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஆட்சியாளர்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிதல் தான் என்பதை யூகிக்க முடிகிறது.

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தி, 25% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசு, அந்த இட ஒதுக்கீட்டை அரைகுறையாக செயல்படுத்திய தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.4 கோடியை வழங்காமல் பாக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் போது அரசும், பள்ளிகளும் ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார்களோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது.

வாக்களித்த மக்களுக்கு தமிழக மக்கள் உண்மையாக நடக்குமானால், 25% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகளை எவ்வாறு கையாளப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகள் மீது கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, அவை அனைத்தும் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வதும், மராட்டிய மாநிலத்தில் நடைமுறையில் உள்ளவாறு ஒற்றைச் சாளர முறையில் 25% விழுக்காடு இடங்களுக்கான மாணவர்களை அரசே தேர்வு செய்து தனியார் பள்ளிகளில் சேர்ப்பதும் தான் ஏழை மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வி வழங்க வகை செய்யும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x