

கால் டாக்ஸி பயணம் என்பது சென்னை போன்ற பெருநகரங் களில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. பணி மற்றும் பிற வேலைகளுக்காகச் செல்லும் பெண்கள், கால் டாக்ஸியில் தனியே பயணிக்கவும் வேண்டியுள்ளது. சென்னை நீலாங்கரையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கால் டாக்ஸியில் சென்ற பெண்ணை, ஓட்டுநர் கத்தியைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். பல பெண்களை அவர் பலாத்காரம் செய்திருப்பது போலீஸ் விசா ரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் மட்டுமே புகார் கொடுத் துள்ளனர்.
கால் டாக்ஸியில் பெண்கள் தனியாக பயணம் செய்ய நேர்ந்தால் ஏறிய உடன், காரின் பதிவு எண், ஏறும் இடம் போன்றவற்றை எஸ்எம்எஸ் மூலம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். எந்த இடத்தில் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற விவரத்தை அவ்வப்போது அவர்களுக்கு செல்போனில் கூறிக்கொண்டே வரவேண்டும். அசம்பாவித சூழலில், உடனடியாக அவர்களது உதவி கிடைக்க இது உதவும். பெப்பர் ஸ்பிரே, சிறிய கத்தி போன்றவற்றை கைப்பையில் எப்போதும் வைத்திருப்பதும் ஆபத்துக் காலத்தில் தற்காப்புக்கு உதவும்.
டாக்ஸிகளுக்கு அறிவுறுத்தல்
இதுபற்றி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘‘கால் டாக்ஸி நிறுவனங் கள் ஓட்டுநர்களை நியமிக்கும் போது, அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் காவல்துறை உதவியுடன் சரிபார்க்க வேண்டும். ஓட்டுநரின் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைத்து கார்களிலும் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்றெல்லாம் கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.
நிர்வாகிகள் விளக்கம்
கால் டாக்ஸி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘சென்னையில் பெரும்பாலும் ஜிபிஎஸ் கருவி, கட்டண மீட்டர்களுடன் கூடிய கால் டாக்ஸிகள்தான் இயக்கப் படுகின்றன. சங்கத்தின் விதிகள், கட்டுப்பாடுகளையும் அவர்கள் மதித்து நடக்கின்றனர். ஓட்டுநர் குறித்த அனைத்து விவரங்களும் வாங்கி வைக்கப்படுகின்றன. ஓட்டுநரின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் பயணி களுக்கும் அனுப்பப்படுகின்றன. புதிதாக அறிமுகமாகியுள்ள ஆன்லைன் கால் டாக்ஸிகள், சங்கத்தின் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை. இதுபோன்ற நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
மேற்கண்ட அறிவுறுத்தல்கள் எல்லாம் வாய்மொழி உத்தரவாக மட்டுமே உள்ளன. கால் டாக்ஸிகளுக்கான மோட்டார் வாகன சட்ட விதிகள் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.