

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்த மோசடியால், கோடிக் கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள் என்பது பொது மொழி. அதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் பல மோசடிகள் நடந்தேறி வருகின்றன. அதில் ஒன்றுதான் நெல் கொள்முதல் மோசடியாகும்.
ஏழை விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது, அவர்கள் விவசாயம் செய்வதன் மூலம் ஏற்படும் நஷ்டத்திலிருந்து ஓரளவேணும் காப்பாற்றபட வேண்டும் என்கின்ற நோக்கத்தில்தான் இந்தியா முழுவதும் நெல் மற்றும் கோதுமை மத்திய, மாநில அரசுகளின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் செயல்படுத்திவருகிறது. அதில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நெல் கொள்முதல் ஆதார விலையாக பொதுரக (மோட்டா) நெல்லுக்கு ரூபாய் 1400- ம், சன்னரக நெல்லுக்கு ரூபாய் 1470 -ம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நிர்வாக சீர்கேட்டாலும், முறைகேடுகளாலும், கட்டுபடியாகாத விலை நிர்ணயத்தினாலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யாமல், தங்கள் நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால் தமிழகத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், மிகக்குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதை மூடிமறைத்திடவும், அதில் ஊழல் செய்திடவும், புது மாதிரியான மோசடி திட்டத்தை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து மிகவும் தரம் குறைந்த நெல்லை, ஒரு குவிண்டால் ரூபாய் 750 முதல் 1000 வரை என மிகக்குறைவான விலை கொடுத்து இடைத்தரகர்கள் மூலம் வாங்கி வந்து, உள்ளூர் விவசாயிகளின் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து, அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை ஒரு குவிண்டால் நெல் ரூபாய் 1400 க்கும், 1470க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 450 முதல் 600 வரை ஆதாயம் பெற்று, மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக அரசு கொள்முதல் நிலையங்கள் மீது விவசாயிகள் பரவலாக புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் இந்த மோசடியால், கோடிக் கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
எனவே தமிழக அரசு உரிய விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்டுள்ள இடைத்தரகர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.