

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீபூவராகசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ முஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூவராகசுவாமி கோயில் உள்ளது. வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் கடந்த 2002-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளன.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருவதால் கோயிலில் திருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. திருப்பணி வேலை எப்பொழுது முடியும் என்பது தெரியாத நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர். கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதில் ஸ்ரீ முஷ்ணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.