கருணாநிதியே இளைஞர்களின் முன்மாதிரி: திருமாவளவன்

கருணாநிதியே இளைஞர்களின் முன்மாதிரி: திருமாவளவன்
Updated on
1 min read

பொதுவாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்க விரும்பும் இளைய தலைமுறையினர் திமுக தலைவர் கருணாநிதியை ஒரு முன்மாதிரியாகக்கொள்ளலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கருணாநிதிக்கு அவர் இன்று விடுத்த வாழ்த்துச் செய்தியில், ''திமுக தலைவர் கருணாநிதி 92ஆம் பிறந்த நாள் காணும் இந்த நாளில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தன்னோடு பொதுவாழ்க்கையைத் தொடங்கிய தலைவர்கள் பலரும் இன்று இல்லை என்னும் நிலையில், தலைவர் கருணாநிதி மட்டும் இதுநாள் வரையில் நல்ல உடல் நலத்தோடும், வலிமையான மனநலத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்; தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருக்கிறார்.

பொதுவாக, பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் தாம் ஏற்றுக்கொண்ட அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தீவிரமாகச் செயலாற்றும்போது தமது உடல்நலத்தைக் கவனிக்க இயலாமல் போய்விடுகிறது. ஆனால், அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் மட்டுமின்றி, கலை-இலக்கியப் படைப்புகளையும் திறம்படச் செய்துவரும் கருணாநிதி தமது உடல் நலத்தையும் பேணிக் காப்பதில் வல்லவராய் இருக்கிறார் என்பதைக் காணும்போது மிகவும் வியப்பாக உள்ளது.

90 வயதைக் கடந்த நிலையிலும், இக்கால இளைய தலைமுறையினருக்கு ஈடுகொடுத்து, பொது விவாதங்களில் பங்கேற்பதும் உடனுக்குடன் வினையாற்றும் ஆளுமையையும் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து முன்னணியில் இருக்கிறார். முதுமை என்பது உடலுக்குத்தான்; உள்ளத்துக்கு இல்லை என்பதை அவரது ஓய்வறியா உழைப்பு உறுதிப்படுத்துகிறது.

'கருணாநிதி என்றாலே உழைப்பு; கருணாநிதி என்றாலே வியப்பு! கருணாநிதி என்றாலே சோதனை; கருணாநிதி என்றாலே சாதனை!' என்னும் வகையில் ஓய்வின்றி, சோர்வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிற கருணாநிதியை, பொதுவாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்க விரும்பும் இளைய தலைமுறையினர் ஒரு முன்மாதிரியாகக்கொள்ளலாம்.

இத்தகைய ஆளுமைமிக்க சிறப்புகளைக்கொண்ட கருணாநிதி நூறாண்டுகள் வாழ்வாங்கு வாழ வேண்டும்'' என்று திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in