மெட்ரோ ரயில் தடம்புரளுவதை தடுக்க ரயில் பாதைகளில் சிறிய தடுப்பு அமைப்பு: 90 சதவீதம் தடம்புரள வாய்ப்பு இல்லை

மெட்ரோ ரயில் தடம்புரளுவதை தடுக்க ரயில் பாதைகளில் சிறிய தடுப்பு அமைப்பு: 90 சதவீதம் தடம்புரள வாய்ப்பு இல்லை
Updated on
1 min read

சென்னையில் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயில்கள் தடம்புரளாமல் இருக்க, ரயில் பாதைகளில் சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, 90 சதவீதம் மெட்ரோ ரயில்கள் தடம்புரள வாய்ப்புகள் இல்லை என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வாரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கலாம் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். அதிகபட்சம் 80 முதல் 90 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கலாம். ஆனால், தொடக்கத்தில் 35 முதல் 40 கி.மீ. வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்றபிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. ஒரு மெட்ரோ ரயிலில் ஆயிரத்து 276 பேர் பயணம் செய்யலாம். பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் தலா 4 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர காலத்தின்போது ஓட்டுநருக்குத் தகவல் தர சிறப்புப் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக்கும் வசதி உள்ளது.

முக்கியமாக ரயில்கள் தடம்புரளுவது பற்றி பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மெட்ரோ ரயில்கள் தடம்புரளாமல் இருக்க ரயில் பாதைகளில் தரமான சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 90 சதவீதம் மெட்ரோ ரயில்கள் தடம்புரள வாய்ப்பு இல்லை. அப்படியே தவிர்க்க முடியாதபட்சத்தில் ரயில் தடம்புரண்டாலும் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாது, கவிழவும் வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in