

கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் உண்மையில் யாருக்கு உளவாளி யாக செயல்பட்டார் என்பது குறித்து புதிய கோணத்தில் க்யூ பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உளவு வேலை யில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடந்த 29-ம் தேதி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்ததாக இலங்கை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா ஆகியோர் மீதும் தமிழக க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாகீர் உசேன், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்றும் பரவலாக கூறப்படுகிறது.
ஜாகீர் உசேனை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்த பின்னர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட ஜாகீர் உசேனை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், க்யூ பிரிவு போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ஜாகீர் உசேனை நேரில் ஆஜர்படுத்துவதில் பல பாது காப்புப் பிரச்சினைகள் இருப்பதால் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த கேட்டிருந்தனர். அதை ஏற்று, செவ்வாய்க்கிழமை மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் 27-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாகீர் உசேன் குறித்து புது தகவல்
ஜாகீர் உசேன் யார், இவர் யாருக்கு உளவாளியாக செயல்பட்டார் என்பது குறித்த விவரங்களை சேகரிப்பதில் க்யூ பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக ஜாகீர் உசேனை அதிகாரிகள் பிடித்துள்ளனர். ஆனால், சில மணி நேரங்களில் போலி பாஸ்போர்ட்டை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு ஜாகீர் உசேனை அதிகாரிகள் விடுவித்துவிட்டனர். விசா பெறுவது மற்றும் அரசு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்கு சாதாரண மக்களுக்கு சில நாட்கள் காலதாமதம் ஏற்படும். ஆனால் ஜாகீர் உசேன் விண்ணப்பித்த ஓரிரு நாட்களிலேயே விசா மற்றும் பல ஆவணங்களை அரசு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். இதற்காக ஜாகீர் உசேனுக்கு உதவி செய்தவர்கள் யார்? என்றும் விசாரிக்கப்படுகிறது.
தனது வழக்கறிஞரிடம்கூட முழுமையான தகவல்களை ஜாகீர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் கொஞ்சம்கூட பதற்றம் இல்லாமல் பதில் கூறியிருக்கிறார். தன்னை ஒரு சக்தி காப்பாற்றும் என்றும் கூறியிருக்கிறார். உண்மையில் ஜாகீர் உசேன் யார், அவருக்கு உதவி செய்பவர்கள் யார், ஜாகீர் உசேனின் பின்னணி என்ன, இவர் பாகிஸ்தானுக்கு உளவாளியா அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்புக்கு உதவி செய்தாரா என்பது குறித்து புதிய கோணத்தில் க்யூ பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.