

தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதை உடனே முறியடிப்பதற்காக மதுரை விமான நிலையம், உயர் நீதிமன்றம், திருப்பரங்குன்றம் கோயிலின் புளுபிரிண்ட் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
தீவிரவாத தாக்குதல் மற்றும் அவசர காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களின் விவரங்களை தேசிய பாதுகாப்பு படையினர் (என்.எஸ்.ஜி.) சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசின் கமாண்டோ படை பிரிவு உதவியுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வரலாற்றுச் சின்னங்கள், முக்கியத் துவம் வாய்ந்த பல இடங்களின் விவரங்கள் ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுவிட்டன. அதில் விடுபட்ட இடங்களின், விவரங் களை சேகரிக்கும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதன்படி மதுரையில் விமான நிலையம், உயர் நீதிமன்றக் கிளை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகியன அமைந்துள்ள பகுதிகள், அவற்றுக்கான வழித்தடங்கள், அங்குள்ள கட்டிடங்களின் புளுபிரிண்ட் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெற்று தாமதமின்றி அனுப்பி வைக்கு மாறு மதுரை மாவட்ட, மாநகர காவல்துறைக்கு தமிழ்நாடு கமாண்டா படை பிரிவிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, முக்கி யமான இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றால், அதை உடனடியாக முறியடிக்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பெறப்படும் விவரங்களின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு படையினர் இங்குவந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வர். அதைத்தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, மாநில கமாண்டோ படை மற்றும் உள்ளுர் போலீஸாருடன் இணைந்து அடிக்கடி கூட்டு பயிற்சியில் ஈடுபடுவர்.
இது ஆபத்து காலங்களில் எதிர்தாக்குதலுக்கும், மீட்பு பணிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என்றனர்.