Last Updated : 09 Jun, 2015 04:41 PM

 

Published : 09 Jun 2015 04:41 PM
Last Updated : 09 Jun 2015 04:41 PM

கன்னியாகுமரி கடலோரங்களில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர் ரெட்லி ஆமைகள்: பாதுகாக்க நடவடிக்கை தேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடலோரங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இனப்பெருக்கத்துக்காக கரைக்கு வரும் இந்த ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல்பரப்பில் அரிய வகை கடல் ஆமைகள் அதிகம் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு ராஜாக்கமங்கலம் முதல் கொல்லங்கோடு வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆமை பொரிப்பகங்கள் வைக்க அரசின் நிதியுதவியுடன் வனத்துறை முயற்சி மேற்கொண்டது. ராஜாக்கமங் கலத்தில் ஆமை பொரிப்பகம் ஏற்படுத்தப்பட்டு அவற்றிற்கு வனத்துறையினர் பாதுகாப்பு அளித்து பொரித்த ஆமைகளை கடலில் விட்டுவருகின்றனர்.

ஆனால், இனப்பெருக்கத் துக்காக கடலோரப் பகுதிக்கு வரும் ஆமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆலிவர் ரெட்லி போன்ற சிற்றாமை ரகங்கள் இயற்கை எழில்சூழ்ந்த மண்திட்டு கள் கொண்ட குளச்சல் துறைமுக பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன. சமீபத்தில் துறைமுக பாலத்தின் அருகே ஆலிவர் ரெட்லி ஆமையொன்று உடலில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து சூழல் கல்வியாளர் டேவிட்சன் கூறும்போது, “இந்த ஆலிவர் ரெட்லி ஆமை இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த ஆமைகளில் 100-ல் இரு ஆமைகள் மட்டுமே இனப்பெருக்கத்துக்கு தயாராகும். ஏப்ரல், மே மாதங்களில் கரையில் இருந்து 3 அல்லது 5 கிலோ மீட்டர் சுற்றளவில் கடலுக்குள் உலவி வரும். இனப்பெருக்கத்தின்போது கரைக்கு வரும்.

தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த ஆமை, விசைப்படகிலோ, கப்பலிலோ அடிபட்டு இறந்திருக்கலாம். அல்லது மீன்பிடி வலைகளில் சிக்கி காயமடைந்திருக்கலாம்.

ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குளச்சலில் அரிய வகை டால்பின்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீனவர்கள் படகில் சென்று கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x