Published : 18 Jun 2015 08:25 AM
Last Updated : 18 Jun 2015 08:25 AM

மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது இரும்பு கம்பி கழன்று விழுந்து பைக்கில் சென்றவர் பலி: பொறியாளர் உட்பட 3 பேர் கைது

கிண்டியில் மெட்ரோ ரயில் பாலம் கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பி கழன்று தலையில் விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பரங்கிமலை மீனம்பாக்கம் இடையே ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. நேற்று காலை சாரம் கட்டும் பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 100 கிலோ எடை மற்றும் 20 அடி நீளமுள்ள ஒரு கம்பி, 50 அடி உயரத்தில் உள்ள சாரத்தில் இருந்து கழன்று சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரின் தலையில் விழுந்தது.

மோட்டார் சைக்கிளுடன் அவர் கீழே விழவே, இரும்புக் கம்பி சாலையுடன் சேர்த்து அவரை நசுக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் இதில் காயம் அடைந்தார்.

மேலும் கம்பிகள் கழன்று விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். அடிபட்டு கிடந்தவரின் அருகேகூட யாரும் செல்லவில்லை.

கர்ப்பிணி மனைவி

பரங்கிமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த வரின் உடலை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை யில், இறந்தவர் மடிப்பாக்கம் வெங்கடேச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கிரிதரன் (30) என்பது தெரிந்தது. வடபழனியில் தனியார் நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த அவர், பணிக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார். கிரிதரனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் ஆகியிருக்கிறது. இவரது மனைவி ருத்ரா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக் கிறார். அவரும் மென்பொருள் பொறியாளர் ஆவார்.

கிரிதரன் பலியான தகவல் அறிந்த அவரது தந்தை லட்சு மணன், தாய் கீதா மற்றும் உறவி னர்கள் குரோம்பேட்டை மருத்து வமனைக்கு வந்தனர். கிரிதரனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது மற்றவர்களையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவத்தால் மீனம்பாக்கம் - கிண்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

3 பேர் கைது

மெட்ரோ ரயில் பொறியாளர் அரவிந்த், மேற்பார்வையாளர்கள் தினேஷ், சுதர்சன் ஆகியோரை பரங்கிமலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின்போது கவனக் குறைவாக செயல்பட்டதாக இவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 6 வடமாநில தொழிலாளர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

| கிண்டி மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணியில்போது கம்பி விழுந்து பலியான கிரிதரன் ஹெல்மெட் அணிந்திருந்திருந்தும் தலை நசுங்கி இறந்துள்ளார்.

அதே விபத்தில் காயம் அடைந்த மன்சூர் இது குறித்து கூறியதன் விரிவான செய்தி - >மெட்ரோ ரயில் மேம்பால விபத்து உயிரிழப்புக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்: கம்பி அதிக எடையுடன் இருந்ததால் தலை நசுங்கியது |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x