

சென்னையில் ராணுவம் மற்றும் கடலோர காவல்படை சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று காலையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. லெப்டினென்ட் ஜெனரல் ஜக்பீர் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ராணுவ மையங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 492 அதிகாரிகள், 1,400 இளநிலை அதிகாரிகள், 18 ஆயிரத்து 250 வீரர்கள் மற்றும் 5 ஆயிரத்து 600 ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய அதிகாரி பிரிகேடியர் பி.எஸ்.சாய் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல், சென்னையில் உள்ள இந்தியக் கடலோர காவல்படையின் கிழக்குப் பிராந்திய அலுவலகம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு ஆசனங்கள் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது.