

குறுவை தொகுப்பு உதவியின் கீழ் டெல்டா விவசாயிகளுக்கு இலவச ஜிப்சம் வழங்குவதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தற் போது குறுவை சாகுபடி தொடங்கி யுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கர்நாடகம் போதிய நீரை தராதது உள்ளிட்ட காரணங் களால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இத னால், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க இயலாது என முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந் தார்.
அதே நேரம் வழக்கமான அளவைவிட மழை அதிகமாக பெய்ததால், டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை விவசாயம் செய்ய ஏதுவாக குறுவை தொகுப்பு உதவியை முதல்வர் அறிவித்தார். மண்ணின் தரத்துக்கு ஏற்ப, பயிர்களுக்கு உரம் இடவேண் டியது அவசியம். டெல்டா பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மண் வளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான ஜிப்சம் விவசாயத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, ஜிப்சம் வாங்கும் பணியில் வேளாண்துறை இறங்கியுள்ளது. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை வேளாண் இயக்குநரகம் கோரியுள்ளது.
இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அடுத்த 10 நாட்களில் ஒப்பந்தம் இறுதியாகிவிடும். அதன்பிறகு ஜிப்சம் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். தற்போது விவசாயிகளுக்கு அரசு அறிவித்த 315 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன’’ என்றார்.