

தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள CLOSE BUTTON-ஐ வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர்கள் அழுத்தி வாக்குப்பதிவை முடித்து வைப்பதில்லை என்றும் இது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் தடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் CLOSE BUTTON-ஐ அழுத்த வேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள், ‘17 -ஏ’ படிவத்தில் இறுதியான பதிவு முடிந்ததும், அடிக்கோடிட்டு அதில் கையொப்பமிடுவதுடன் இறுதி வரிசை எண்ணையும் எழுதவேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும், வேட்பாளர்களின் முகவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், மொத்த வாக்குப் பதிவு தொடர்பான சான்றொப்பம் இடப்பட்ட 17-சி படிவத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.