சூனாம்பேடு - தொழுப்பேடு சாலையை சீரமைக்கக் கோரி விவசாயிகள், சிஐடியு மறியல்

சூனாம்பேடு - தொழுப்பேடு சாலையை சீரமைக்கக் கோரி விவசாயிகள், சிஐடியு மறியல்
Updated on
1 min read

செய்யூர் வட்டத்துக்குட்பட்ட சூனாம்பேட்டிலிருந்து, மணப்பாக்கம், வண்ணியநல்லூர் வழியாக தொழுப்பேடு செல்லும் சாலை ஒன்று உள்ளது. இது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பிரதான சாலையாகும். இத்தடத்தில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு மிக முக்கியமான சாலையாக இது விளங்கி வருகிறது.

இந்த சாலையை முறையாக பராமரிக்காததால் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் விபத்துகள் நடக்கின்றன. எனவே இந்த சாலையை சீரமைத்து இருவழிப்பாதையாக மாற்றக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் சூனாம்பேடு - தொழுப்பேடு சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

தகவல் அறிந்து வந்த செய்யூர் வட்டாட்சியர், சூனாம்பேடு காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் பேச்சு நடத்தினர். சாலையை சீரமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in