Last Updated : 03 Jun, 2015 07:32 AM

 

Published : 03 Jun 2015 07:32 AM
Last Updated : 03 Jun 2015 07:32 AM

சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு: 10 நாளில் 0.5 டிஎம்சி நீர் கிடைக்கும் - கண்காணிக்க அதிகாரிகள் விரைவு

ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீர் சென்னைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடையும். பத்து நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 500 கன அடி வீதம் சென்னைக்கு நீர் வழங்கப்படும் என்று ஆந்திரா தெரிவித்துள்ளது. இதை கண்காணிப்பதற்காக தமிழக அதிகாரிகள் ஆந்திரா விரைந்துள்ளனர்.

ஆந்திரா வழியாக கடலில் கலக்கும் கிருஷ்ணா நீரை கால்வாய் மூலம் சென்னைக்கு கொண்டு வரும் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் மூலமாக சென்னைக்கு ஆண்டு ஒன்றுக்கு 15 டிஎம்சி கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட வேண்டும். இதில் தமிழகத்துக்கு அருகில் உள்ள முக்கியமான அணை கண்டலேறு அணையாகும்.

இங்கிருந்து வெட்டப்பட்டுள்ள 152 கி.மீ. கால்வாய் மூலம் சென்னைக்கு நீர் திறந்துவிடப்படுகிறது.

ஏப்ரல் மாதம் வரை 5.4 டிஎம்சி நீர்

கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை கண்டலேறுவிலிருந்து 5.4 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

சென்னையில் உள்ள ஏரிகளில் நீர் இருப்பு 15 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 1.65 டிஎம்சி ஆகும். 3.32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர் தேக்கத்தில் 0.096 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. இந்நிலையில், ஆந்திராவிலிருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் சென்னையின் குடிநீர் தேவைக்கு மிக அவசியம்.

இது குறித்து ஆந்திர நீர்வளத்துறையைச் சேர்ந்த கண்டலேறு அணை பொறுப்பாளர் கூறும்போது, “தமிழகத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பிறகு, சென்னைக்கு நீர் திறந்துவிடக் கேட்கப்பட்டது. அதன்படி, ஒரு நாளுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் திங்கள்கிழமை முதல் பத்து நாட்களுக்கு திறந்துவிடுகிறோம். மொத்தம் 0.5 டிஎம்சி வழங்கப்படும். கண்டலேறு அணையில் தற்போது 7.8 டிஎம்சி நீர் உள்ளது. இதிலிருந்து 1.4 டிஎம்சி நீர் புவிஈர்ப்பு விசையின் காரணமாக திறந்துவிடமுடியும். அதற்கு மேலும் நீர் எடுக்க வேண்டுமானால் பம்ப் செய்துதான் எடுக்க முடியும்” என்றார்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறுகையில், ‘‘கண்டலேறுவி லிருந்து திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் இன்னும் இரண்டு நாட்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையில் உள்ள ஜீரோ பாயின்ட்டை வந்தடையும். தண்ணீர் வருவதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் இன்று ஆந்திரா செல்கின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x