

பழநி, கொடைக்கானல், கன்னியாகுமாரி, ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் முகாமிட்டுள்ள பஞ்சாபிகள், மும்பையில் தயார் செய்யப்படும் டெட்டிபியர் பொம்மைகளை விற்பனை செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு அதிகம் பிடித்தமானது டெட்டிபியர் பொம்மைகள். ஏழைகள் முதல் பெரும் பணக்காரர் வரை, அவரவர் வசதிக்கேற்ற விலையில் இந்த பொம்மைகளை வாங்கிக் கொடுப்பார்கள்.
கொடைக்கானல், பழநிக்கு தற்போது ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இவர்களைக் குறி வைத்து, தற்போது மும்பையில் தயாரிக்கப்படும் டெட்டிபியர் பொம்மைகள் சாலையோரங்களில் விற்கப்படுகின்றன.
பஞ்சாபிகள், மும்பையில் தயாரிக்கப்படும் செயற்கைப் பஞ்சு (ரெக்ரான்) நிரப்பாத பொம்மைகளை வாங்கிவந்து, அவற்றில் பொம்மைகளின் அளவுக்கு ஏற்றபடி பஞ்சுகளை நிரப்பி விற்பனை செய்கின்றனர்.
பழநிக்கு முக்கிய வழித்தடமான திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் வழி நெடுகிலும், தற்போது டெட்டிபியர் பொம்மை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த மும்பை டெட்டிபியர் பொம்மைகள் ரூ. 100 முதல் ரூ. 2500 வரை விற்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்கள், மும்பையைச் சேர்ந்தவர்கள் தற்போது தமிழக சுற்றுலாத்தலங்களில் இந்த டெட்டிபியர் பொம்மைகளை விற்கும் பணியில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். கடைகள் பிடிக்காமல், அட்வான்ஸ் கொடுக்காமல் புளிய மரத்தடி, சாலைகளின் நடைபாதைகளில் இவர்கள் கயிறுகளை கட்டி அதில் டெட்டிபியர் பொம்மைகளை தொங்கவிட்டு விற்று வருவதால் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.
இதுகுறித்து மும்பை மாநிலம், கல்யாண் அருகே உள்ள அஞ்சுபேட்டையைச் சேர்ந்த கமல்சிங், அர்ஜுனன், தீபக்சிங் ஆகியோர் கூறியதாவது: குடும்பம், குடும்பமாகச் சேர்ந்து டெட்டிபியர் பொம்மை விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். மொத்தமாக லாரியில் இந்த பொம்மைகளைக் கொண்டு வந்து தமிழகத்தில் விற்போம். இரண்டு, மூன்று மாதத்தில் விற்று முடிந்ததும், சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் கொண்டுவந்து விற்போம். டெட்டிபியர் பொம்மைகள் மட்டுமில்லாது பாத் டப், கொசுவலை, தலையணை ஆகியவற்றையும் விற்பனை செய்கிறோம்.
குறைந்தப்பட்சம் ரூ.100 முதல் ரூ.2500 வரை விலையில் டெட்டிபியர் பொம்மைகளை விற்கிறோம். விடுமுறை நாட்களில் ரூ. 2500 முதல் ரூ. 5000 வரை பொம்மைகள் விற்பனையாகும். எங்களுக்கு ரூ.1000-க்கு விற்பனை செய்தால் ரூ.150 முதல் ரூ.200 வரை லாபம் கிடைக்கும்.
கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், சென்னை மெரீனா பீச், ஒட்டன்சத்திரம், புதுசத்திரம், கன்னியாகுமரி, ராமேசுவரம் வரை டெட்டிபியர் பொம்மைகளை விற்பனை செய்ய கொண்டுசெல்வோம் என்றார்.
சாலைகளில் வண்ண வண்ண நிறங்களில் மரத்தடியில் தொங்கும் இந்த பொம்மைகள் பார்ப்பவர்களையும், குழந்தைகளையும் கவர்ந்து வருகிறது.