

பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி (23) தனது தந்தை ஆனந்தனுடன் வியாழக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
27 முறை கைதானவர்!
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நந்தினி, இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த போராட்டங்கள் காரணமாக 27 முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் நந்தினியும், அவரின் தந்தையும் நின்றுகொண்டிருந்தனர். 'டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டின் அவமானம். மதுக்கடைகளை மூடு. மக்களை வாழவிடு' என்ற வாசகங்கள் அடக்கிய அட்டையை அவர்கள் வைத்திருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, "நாங்குநேரியில் பள்ளி வேன் விபத்து நிகழ்ந்ததற்கு அதன் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததுதான் காரணம். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் பலர் விபத்தில் சிக்கி இறக்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றன. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.