

அதிமுக அமைப்புச் செயலாளர் சுலோச்சனா சம்பத் உடல், சென்னை வேலங்காடு மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் (86), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல், வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சுலோச்சனா சம்பத் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நேற்று காலை 9.45 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, நடிகர் பிரபு, திமுக மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சுலோச்சனா சம்பத் உடல், அண்ணாநகரில் உள்ள வேலங்காடு மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தார் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது.