

தமிழக தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு தகவல் ஆணையர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசின் பொது அதிகார அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களைப் பெற கடந்த 2005-ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்த சட்டத்தை அமல்படுத்திய தமிழக அரசு, தமிழ்நாடு தகவல் ஆணையத்தை உருவாக்கியது. இந்த ஆணையத்துக்கு ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் என மூன்று பேரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தக வல் ஆணையராகவும், ஜி.ராம கிருஷ்ணன் மற்றும் ஆர்.ரத்தினசபாபதி ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாகவும் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2008-ல் தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது.
இதையடுத்து 2008-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினர் ஆர்.பெருமாள்சாமி, புள்ளியியல் துறை ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் டி.சீனிவாசன், சேலம் அரசு மகளிர் கலைக் கல்லுாரி ஓய்வு பெற்ற முதல்வர் சாரதா நம்பி ஆரூரான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ராமசாமி ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமிக்கப் பட்டனர்.
கே.எஸ்.திரிபாதி நியமனம்
தகவல் ஆணையர்களாக நிய மிக்கப்பட்டவர்கள் பதவியேற்ற காலத்தில் இருந்து ஐந்து ஆண்டு கள் அல்லது 65 வயது நிறைவடை யும் வரை பதவியில் இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில் மாநில தகவல் ஆணையராக இருந்த ஆர்.ரத்தினசாமி 2009-ம் ஆண்டும், தலைமை தகவல் ஆணையராக இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் 2010-ம் ஆண்டும் ஓய்வு பெற்றனர். இந்நிலையில் 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்ற தமிழக தலைமை செயலர் கே.எஸ்.திரிபாதி மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப் பட்டார்.
அதைத் தொடர்ந்து ஜி.ராம கிருஷ்ணன் 2010 -ம் ஆண்டும், சாரதா நம்பி ஆரூரான் 2011-ம் ஆண்டும், ஆர்.பெருமாள்சாமி 2012-ம் ஆண்டும் ஓய்வு பெற்றனர். மற்றொரு தகவல் ஆணையரான டி.ஆர்.ராமசாமி மரணமடைந்தார். இதனால் ஐந்து தகவல் ஆணை யர்கள் பணியிடங்கள் காலியாகின. இதையடுத்து, 2012-ம் ஆண்டு டாக்டர் வி.சரோஜா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிறிஸ்டோபர் நெல்சன், பி.தமிழ்ச்செல்வன், பி.நீலாம்பிகை, எஸ்.எப்.அக்பர் ஆகியோர் தகவல் ஆணையர் களாக நியமிக்கப்பட்டனர்.
கடந்த 2008-ல் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட டி.சீனிவாசன் பணி நிறைவு காரணமாகவும், 2012-ல் நியமிக்கப்பட்ட வி.சரோஜா 65 வயது நிரம்பியதாலும் 2013-ல் ஓய்வு பெற்றனர். இதனால் தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை நாலாக குறைந்தது.
ஸ்ரீபதி ராஜினாமா
இந்நிலையில் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஸ்ரீபதி கடந்த ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் அந்த பதவியும் காலியாக இருக்கிறது.
இந்த இடங்கள் காலியாக இருப்பது தகவல் ஆணையத்தின் பணிகளை தொய்வடையச் செய்யும் என்பதால், விரைவில் அவற்றை நிரப்ப வேண்டும் என தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.