

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிரித்துள்ளது. கடந்த இரு நாட்களில் அணை நீர்மட்டம் 2.61 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் 74.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 77.16 அடியாக உயர்ந்தது. கடந்த இரு நாட்களில் அணை நீர்மட்டம் 2.61 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு விநாடிக்கு 17,386 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணை யில் இருந்து குடிநீர் தேவைக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை விநாடிக்கு 19 ஆயிரத்து 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பெரியபாணி வழியாக பரிசலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சின்னாற்றில் இருந்து மணல் திட்டு வழியாக கர்நாடகா எல்லையில் உள்ள அருவிகளுக்குச் சென்று மீண்டும் மாமரத்துக்கடவு பரிசல்துறை வரை பரிசல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அந்த அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க பயணிகளுக்கு தடை விதிக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.