Published : 29 Jun 2015 03:43 PM
Last Updated : 29 Jun 2015 03:43 PM

தனியார் பள்ளிகளை பொதுப் பள்ளிகளாக மாற்ற சட்டம் இயற்ற கோரிக்கை

தனியார் பள்ளிகளை பொதுப் பள்ளிகளாக மாற்ற சட்டம் இயற்ற வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்; கல்வி வணிகமயமாதலைத் தடுப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 5- வது கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

வள்ளலார் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி நிர்வாகி கு.ந.தங்கராசு தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கருத்துரை வழங்கினார்.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்படும் முப்பருவக் கல்வி முறையை, இந்தக் கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கும் செயல்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பாடங்களை பிளஸ் 1 வகுப்பில் இருந்தே படிப்பதால், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இதனால் மருத்துவம், வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட உயர்க் கல்வி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்கள் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டிலேயே பிளஸ் 1 வகுப்புக்கு, பருவத் தேர்வு (semester exam system) முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த புதிய சட்டம் கொண்டுவர, உயர்நிலைக் குழுவை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் பள்ளிக் கல்வித் துறை பதில் அளித்துள்ளது.

அரசு இயற்றும் புதிய சட்டம், தனியார் பள்ளிகளை பொதுப் பள்ளி மற்றும் அருகமைப் பள்ளி அமைப்பு முறைக்குள் கொண்டுவர வழிவகுக்கும் வகையில் இருக்க வேண்டும். தாய்மொழி வழிக்கல்வியைப் பாதுகாக்க, வளர்தமிழ் இயக்கம் 1000 தமிழறிஞர்களை ஒன்றிணைத்து நடத்த உள்ள பட்டினிப் போராட்டத்தில், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் க.இரா.முத்துசாமி தலைமையில் 100 பேர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயற்கை வாழ்வகம் க.இரா.முத்துசாமி, நொய்யல் இலக்கிய மையத்தின் இளஞாயிறு ச.மோகனராசு, தாய்த்தமிழ்க் கல்விப் பணி அறக்கட்டளை உறுப்பினர் அ.அகமதுகனி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வட்டாரப் பொருளாளர் ப.மணிகண்டபிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x