Last Updated : 29 Jun, 2015 04:44 PM

 

Published : 29 Jun 2015 04:44 PM
Last Updated : 29 Jun 2015 04:44 PM

சாலையோர மரங்களை சேதப்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள்: தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தங்களது நிறுவனத்தைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக சாலையோர மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பர பதாகைகளைத் தொங்கவிடுவதால் மரம் சேதமடைவதைத் தவிர்க்க, தனியார் நிறுவனங்களின் இத்தகைய செயலுக்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூழலைப் பாதுகாப்பதற்காக சாலையோரங்களில் அதிகளவில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும், அங்கு மரங்கள் வெட்டப்பட்டால் கூடுதலான மரக்கன்றுகளை நடவேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் சேர்க்கைக்காக சாலையோர மரங்களில் ஆணிகளை அடித்து அதில் விளம்பர பதாகைகளைத் தொங்கவிடுகின்றனர்.

இதேபோல, ஒரே மரத்தில் ஏராளமான பதாகைகளை தொங்கவிடுவதற்காக அதிக எண்ணிக்கையிலான ஆணிகளை அடிப்பதால் மரத்தின் உள்பகுதி சிதைந்து மரம் எளிதில் பட்டுப்போகிறது. மேலும், விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும் தொடர்கி றது.

சாலையோர மரங்களில் விளம்பர பதாகைகள் தொங்கவிடப்படுவதைத் தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.பிரபாகரன் கூறியதாவது:

சாலையோரம் உள்ள மரங்களில் யாரிடமும் அனுமதிபெறாமல் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளின் நிர்வா கத்தினர் விளம்பர பதாகைகளை தொங்கவிடுகின்றனர். இதனால் மரங்கள் சேதமடைவதுடன் விபத்துக்கு வழிஏற்படுத்துவதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஆயுட்காலம் குறைகிறது

இதுகுறித்து தாவரவியல் ஆசிரியர் செம்பட்டிவிடுதியைச் சேர்ந்த ஆர்.வீரப்பன் கூறியபோது, “தற்போது சாலையோரங்களில் வயதான மரங்களே அதிகமுள்ளன. அத்தகைய மரங்களில் கிளைகளில் இருந்து வேருக்கும், வேரிலிருந்து கிளைகளுக்கும் உணவுப்பொருட்கள், சத்துக்களைக் கடத்தும் திசுக்கள் மரத்தின் புறத்தோலின் அருகிலேயே உள்ளன. ஆணிகள் அடிப்பதால் திசுக்கள் சிதைந்து உணவுப்பொருள், சத்துக்கள் வெளியேறி வீணாவதால் மரத்தின் ஆயுட்காலம் குறைகிறது” என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ஒருவர் கூறியபோது, “எங்களது கண்காணிப்பில் உள்ள சாலையோர மரங்களில் அனுமதி பெறாமல் எதையும் செய்யக்கூடாது. அதேசமயம், விளம்பர பதாகைகளால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மரங்களில் அவற்றைத் தொங்கவிட அனுமதிப்பதில்லை. தொங்கவிட்டுள்ள பதாகைகளை சாலைப்பணியாளர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x