

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை காண்பதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர்.
பார்த்தசாரதி சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின.
அரசு மற்றும் உபயதாரர்கள் தந்த ரூ.5 கோடி நிதியின் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்த திருப்பணி வேலை கள் சமீபத்தில் நிறைவடைந்ததை யடுத்து, ஜூன் 12-ல் கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டது. கும்பாபிஷே கத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.
நேற்று காலை 7.35 மணியளவில் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பார்த்தசாரதி சுவாமி, ஆண்டாள், வேத வல்லித் தாயார், ரங்கநாதர், கோதண்டராமர், ராமாநுஜர், மணவாள மாமுனிகள், ஆழ்வார் ஆச்சாரியர்கள் சன்னதிகளுக்கு வைகானச ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன.
காலை 10 மணி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பார்த்தசாரதி சுவாமியை தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று அதிகாலை 3 மணியளவில் விஸ்ரூப தரிசனம், கும்ப ஆராதனம், காலசந்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தொடர்ந்து 8-வது கால ஹோமம், திவ்யபிரபந்த சேவை, வேதபாராயணம், மஹாபூர்ணாஹுதி, பெருமாள் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மாலையில் ராமர் திருவீதி உலா, வேதவல்லித் தாயார், ரங்கநாதர் உள் புறப்பாடு, பார்த்தசாரதி சுவாமி, ஆண்டாள், உடையவர், மணவாள மாமுனிகள் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி தற்காலிக காவல் நிலையம், கழிப் பறை வசதி, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டன.