

சென்னை நகரில் மழைக் காலத்தின்போது கொசுத் தொல்லை சற்று அதிகரித்திருந்தது. இதைத் தொடர்ந்து கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், கொசுக்கடியால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சி தீவிர முயற்சிகளைத் தொடங்கியது.
கொசுக்களில், அனபிலிஸ், ஏடிஸ் மற்றும் கியூலெக்ஸ் ஆகிய மூன்று வகை யுண்டு. அதில், முதலிரண்டு வகைகளே கடி மூலம் நோயை பரப்புபவை ஆகும். அவை மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களை உருவாக்கும். டெங்கு மற்றும் சிக்குன் குனியாவைப் பரப்பும் கொசுக்கள், கொட்டாங்குச்சிகள், டீ கப்புகள் போன்றவற்றில் தேங்கும் நீரில் உற்பத்தியாகின்றன.
இதுபோன்ற இடங்களில் கொசு உற்பத்தியைத் தடுத்து நிறுத்தினால் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி, சென்னை நகரில் உள்ள 17 லட்சம் வீடுகளை 3,200 பிரிவுகளாக அதிகாரிகள் பிரித்தனர். அதன்படி 500 வீட்டுக்கு ஒரு ஊழியர் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
இவை தவிர, கொசு உற்பத்திக்கு உகந்த நீர்வழித்தடம் மற்றும் மழைநீர் வடிகால்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை தொடங்கியது. சென்னையில் 196 கி.மீ. நீளத்துக்கு 21 கால்வாய்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தத் தடங்களில் கொசு உற்பத்திக்குக் காரணமாக விளங்கும் ஆகாயத் தாமரைகள், மிதக்கும் குப்பைகளை சுத்தப் படுத்த மாநகராட்சி திட்டமிட்டது.
10 வழித்தடங்களில் 76.3 கி.மீ. நீளத்துக்கு சுத்திகரிப்புப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். முதல் இரண்டு மாதங்கள், ஆகாயத்தாமரையை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு நீர்வழித்தடங்களில் அவை மீண்டும் வந்துவிடாமல் பராமரிக்கும் பணிகளும் நடை பெற்றன.
625 முறைகேடான இணைப்புகள்
நீர்வழித்தடங்களைச் சுத்தப்படுத்திய பிறகு, கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களின் அடர்த்தி பெருமளவில் குறைந்தது. கொசுத் தொல்லை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களும் குறைந்தன.
இதுதவிர, மழை நீர் வடிகால் களிலும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 625 முறைகேடான மழைநீர் வடிகால் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டன. இதனால் நீரோட்டம் குறைந்து, கொசு உற்பத் தியும் கட்டுப்படுத்தப்பட்டது.
மேலும், 332 கைத்தெளிப்பான் கருவிகள் மற்றும் 67 கொசு ஒழிப்புப் புகை அடிக்கும் வாகனங்கள் மூலம் கொசு உற்பத்தித் தடுப்புப் பணிகள் நடைபெற்றன. இதனால் கொசுக்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
நோய் குறைந்தது
உதாரணத்துக்கு, 2011-ம் ஆண்டில் சென்னையில் 9,313 ஆக இருந்த மலேரியா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 2013-ல் 5,166 ஆகக் குறைந்துள் ளது. இதுபோல், டெங்கு பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக் கையும், கடந்த ஆண்டைவிட (553) தற்போது பெரிதும் (133) குறைந்துள்ளது. அத்துடன், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடக்கும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.