

சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, பி.டெக். கைத்தறி தொழில்நுட்பப் படிப்பில் 30 இடங்கள் பொறியியல் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும்.
தமிழகத்தில் உள்ள 536 பொறி யியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந் தாய்வு மூலமாக ஒற்றைச்சாளர முறை யில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித் துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப் பட்டது. பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், சேலத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இந்த ஆண்டு புதிதாக பி.டெக். கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்ப படிப்பை அறிமுகப் படுத்துகிறது. இதுவரை கைத்தறிவு தொழில்நுட்பம், ஜவுளி வேதியியல் தொடர்பான டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மட்டுமே அந்த நிறுவனம் நடத்தி வந்தது. முதல்முறை யாக இந்தக் கல்வி ஆண்டிலிருந்து பி.டெக். படிப்பை நடத்த உள்ளது.
இந்தப் புதிய படிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அங்கீ காரத்தை பெற்றுவிட்ட அந்த நிறு வனம், இணைப்பு அங்கீகாரம் (Affiliation) வேண்டி அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப் பித்துள்ளது. பி.டெக். கைத்தறி தொழில்நுட்ப படிப்பில் மொத்தமுள்ள 60 இடங்களில் 50 சதவீத இடங்களை, அதாவது 30 இடங்களை ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பவும் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான அகில இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஓரிரு நாளில் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் நேற்று தெரிவித்தார்.
ஏற்கெனவே, சென்னையில் உள்ள சிப்பெட், காரைக்குடியில் உள்ள சிக்ரி ஆகிய மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள பி.டெக். இடங்கள் அண்ணா பல்கலைக்கழக பொது கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.